மனன மந்திகள்

ஒரு மனிதனுடைய அறிவுத் திறனுகும் அவர் பெறும் கல்விக்கும் தொடர்பு இருக்கிறதென இன்னமும் நம்புகிறீர்களா? ஒரு வேளை இருக்கலாம், வாய்ப்பிருக்கிறது, என்பது போலத்தான் நமது பதில்கள் இருக்க முடியும். இதற்கு முன்னர் நாம் சிந்தித்துப் பார்த்த கல்வியுன் நோக்கம் குறித்த தெளிவு முழுமையானதாக நமக்கு இருந்திருக்குமேயானால் இந்த கேள்வியே கூட அர்த்தமற்றதாகி இருக்கும். இன்றைய கற்கும் மாணாக்கரின் நிலை என்ன? முன்னிருந்த மாணவ தலைமுறை  தகவல்கள் சரிவரக் கிடைக்காததால் சிரமப்பட்டது. இன்றைய மாணவர் நிலையோ அதற்கு முற்றிலும் மறுதலையாக தகவல் மீப்பெருக்கத்தால் சிரமப்படுகிறது. இன்னும் அதிகம் இன்னும் அதிகம் என காலஞ் செல்லச் செல்ல பாடங்களும், பாடப் பகுதிகளும் அதிகரித்தபடியே தான் இருக்கின்றன. மேலும் மாணாக்கரின் அறிவுக் கூர்மை அவர்கள் தேர்வுகளில் அளிக்கும் பதில்களின் வழியே அவர்கள் பெறும் மதிப்பெண்களின் மூலமாகவே மதிப்பிடப்படுகிறது. இன்றைய நமது தேர்வு முறைகளும் எழுப்படும் வினாக்களும் மாணவரின் புரிதல் திறனை மையப்படுத்தாமல் தகவலை மனதில் இருத்தி மீண்டும் நினைவிற் கொள்வதையே மையப்படுத்தி இருப்பதால், படித்த பாடப் பகுதிகளை புரிதல் இரண்டாம் பட்சமாகி புரிந்தாலும் புரியாவிட்டாலும் மதிப்பெண்களின் பொருட்டு அத்தகவல்களை மனனம் செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். வேலை தேடும் படலத்திற்கு ஆதாரமாக மதிப்பெண்களும், பெற்றிருக்கும் விழுக்காடுகளுமே இருக்கிற ஒரு சமூக அமைப்பில் மாணவருக்கு இது ஒரு இருத்தலியல் நெருக்கடி தான்.

இப்போது பெரும்பாலான முதல் தர மாணவர்கள் சிறந்த மனனம் செய்யும் ஆற்றல் உடையவர்களாகவும் அதனை மனதில் இருத்தி மீண்டும் கொணர தக்க விதத்தில் சிறப்பான நினைவாற்றல் உடையவர்களாகவுமே இருக்கின்றனர் என்பது நிதர்சனம். இந்த விடயத்தில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்று எந்தவித வித்தியாசங்களும் இல்லையென்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

Pressurized Learning

உலக அளவில் பல்வேறு நாட்டு மாணாக்கரின் கல்வித்தரத்தை ஓப்பீடு செய்கையில் மற்ற எந்த தேசத்து மாணவரையும் விட இந்திய மாணவர்கள் மிக அதிகமான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கின்றர் என்பது புலனாகிறது. அதே வேளையில் தாம் கற்றுக் கொண்டவற்றை நடைமுறைத் தேவைகளுக்கு பயன்படுத்தும் திறனற்றவர்களாக இருக்கின்றனர் என்பதும் நிகழ் யதார்த்தம். இதுவே பட்டதாரிகள் பலர் வேலையின்மையால் அவதியுறுவதற்கு மிக முக்கிய காரணமாயிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை வேலையில்லாத் திண்டாட்டம் (Unemployment)  சொல்லப்போனால் கற்பிதமே. உண்மையில் இருப்பதென்னவோ Unemployable சூழல் தான்.

புரியாமல் மேலதிகத் தகவல்களை மனனம் செய்து நினைவில் இருத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு அதிகமான நேரமும் மனித ஆற்றலும் விரயமாகிறது. ஆனால் மிகக் கடினமாக உழைத்து கைக்கொண்ட மதிப்பெண்களும், பட்டங்களும் தாங்கள் கனாக் கண்ட வேலை வாய்ப்பினை தர இயலாத நிலையை எதிர்கொள்ளும் இளைய சமூதாயம் விரக்தியின் விளிம்பிற்குச் செல்வது கசப்பான உண்மை (கடந்த வருட மத்தியில் வெளியான ஒரு புள்ளிவிவரம் இந்தியாவில் வேலையில்லாத பொறியியற் பட்டத்தரிகளின் எண்ணிக்கை 1.5 கோடி என அதிர்ச்சியளிக்கிறது). இந்த முரணே நமது தற்கால கல்வி முறையின் தலையாயது என்பேன்.

நெருக்கடி மிகுந்த கற்றல்-கற்பித்தல் சூழல்

முன் சொன்னதைப் போல நமது கல்வித் திட்டம் மிகுந்த இறுக்கமுடையதாகவும், தனிமனித திறன்களை செழுமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை தருகிற நெகிழ்வுத்தன்மை அற்றதாகவும் உள்ளது. ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவ-ஆசிரியர்கள், தங்களுக்கு போதிக்கப்படும் குழந்தை மனோவியல் (Children Psychology) பாடங்களில் மாணவரிடையேயான தனிநபர் வேறுபாடுகள் (Individual Differences) குறித்து அறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மாணவனும் தனிப்பட்ட ஆளுமையையும் திறனையும் உடையவர். அவர்களின் புரிதல் திறன் முதல் எல்லாமே ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியவை. எனவே அதனை மனதிற் கொண்டு எதிர்காலத்தில் ஆசிரியராகவிருக்கும் ஒருவர் மாணவரை அணுக வேண்டும் என்பதே அதன் உட்பொருள். இதையெல்லாம் கற்று வருகின்ற ஒரு ஆசிரியர் தன்னுடைய பணியில், கற்றறிந்த கோட்பாடுகளுக்கும் நடைமுறை யதார்த்ததிற்கும் உள்ள பெரும் இடைவெளியை சந்திக்கிறார்.

சற்றே ஊன்றி கவனித்தால் நமது தற்கால கல்விக் கூடங்களின் இயக்குமுறைகள் ஒரு தொழிற்சாலையை பலவிதங்களில் ஒத்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு தொழிற்சாலையில் வெளியீடு அளவு எப்போதும் முன்நிர்ணயம் செய்யப்பட சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதையே குறியாகக் கொண்டிருக்கும். அப்படித்தான் இருந்தாக வேண்டும். இலக்கை அடைய உற்பத்தியில் சுணக்கம் ஏற்படாதவாறு தொழிலாளர்களை தேவையான அல்லது பல வேளைகளில் தேவைக்கு அதிகமான வேலையை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை செயல்படுத்த தொழிற்சாலையின் மேலாளர் தனக்குக் கீழ் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். அவர்களோ தங்களின் நெருக்கடியை தமக்குக் கீழே இருக்கும் தொழிலாளர்களின் மீது திணிக்கின்றனர்.

Indian Education system

எத்தவிதத்திலும் கல்விக் கூடங்களின் இயங்கு முறைகள் இதிலிருந்து வேறுபடுவதில்லை. மாறாக நோக்கங்களின் அளவில் மட்டுமே மாறுபாடு இருக்கிறது. இன்றைய கல்விச் சூழலில், பள்ளி அளவில் – பள்ளித் தாளாளர், தலைமையாசிரியர் (பல இடங்களில் தனியார் பள்ளிகளின் முதலாளிகள் வேறு தலைமையாசிரியர் வேறு), ஆசிரியர்கள், மாணாக்கர், என்ற படிநிலைகளும் பள்ளிக்கு வெளியே மாணாக்கரின் பெற்றோர் என்றும் வைத்துக் கொண்டால், இவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகாதவர்கள் யாருமே இல்லை என்பதே உண்மை. மிக அதிகமான பளு மாணாக்கரின் தலையிலேயே விடிகிறது என்பதும் உண்மையே. வணிகமயமாக்கப் பட்ட கல்வியில், மதிப்பெண்களும் சதவீகிதங்களுமே சாதனைகளாகின்றன. பெற்றோர் அதிக சாதனை புரிந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முண்டியடிகின்றனர். பள்ளித் தலைமைகள் தங்கள் பள்ளிகளின் சாதனைகளை விளப்பரப்படுத்தியே அதிக வாடிக்கையளர்களைக் கவருகின்றனர். அதனால் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டிய இக்கட்டு அவர்களுக்கு. ஏனேனில் இந்த கல்வியாண்டின் சாதனைகளும் முடிவுகளுமே அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலீடு. எனவே இது பள்ளி நிர்வாகத்தின் தலையாய தேவையாகிறது. இத்தேவை அவர்கள் வழியாக தலைமை ஆசிரியரை முதன்மையாதொரு கடமையாக வந்தடைகிறது. தலையாசிரியர்கள் தங்களின் இந்த இலக்கை அடைவதென்பது முழுவதும் ஆசிரியர்களைச் சார்ந்தே இருப்பதால், தேவை அவர்களை அடையும் போது அது நிர்பந்தமாக மாற்றம் பெறுகிறது. இறுதியாக அத்தனை அழுத்தமும் மாணவரை நெருக்குவதாகவே வடிவெடுக்கிறது. எனவே இங்கு தனிமனித சாதனைகள் எனும் பேரில் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு பொதுத் தேவையை நோக்கிய நிற்கா ஓட்டமாக கல்வி மாறுகிறது. இது ஒரு வலைப் பின்னல். இங்கு எதுவும் தனித்திருக்க முடியாது. எல்லாம் ஒன்றையொன்று பிரிக்கவியலாத அளவிற்கு சார்புடையவை. அதிக மதிப்பெண்கள் உற்பத்தியென்பது இக்கல்வித் தொழிற்சாலைகளின் தாரக மந்திரமாகிறது. மதிப்புக் கூட்டுக் கல்வி  ‘மதிப்பெண் கூட்டுக் கல்வியாக’ அரிதாரம் பூசுகிறது.

மேற்சொன்ன இக்கட்டுகளில் இருந்து அரசுப் பள்ளிகள் விதிவிலக்கே அல்ல. அங்கும் இதே தேவைகள் இதேயளவு தீவிரத் தன்மையுடன் முன்வைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் நாம் பார்த்த படிநிலைகளில் முதலில் இருக்கும் தாளாளர், அரசுப் பள்ளியைப் பொருத்தவரை அரசே தான். எனவெ அதனை நடைமுறைப்படுத்த மட்டும் மாவட்ட கல்வி அதிகாரி அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறார். வித்தியாசம் அவ்வளவே. போக, ஏனைய தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டிய நிர்பந்தங்கள் அரசுப் பள்ளிகளுக்கு கிடைக்கும் கூடுதல் இணைப்பு.

பிள்ளைகள் பள்ளியில் போதிக்கும் ஆசிரியர்களின் நிர்பந்தங்களுக்கும், வீட்டில் பெற்றோரின் நிர்பந்தங்களுக்கும் இடையே அல்லாடுகின்றனர். மகிழ்வாய் அமைய வேண்டிய கற்கும் பருவம் நரகமாகிறது.

(தொடரும்…)