exam-notes-1
 
தேர்வு பூதம்
போதனா முறையில் ஒரு முக்கிய அம்சம் தேர்வுகள். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்களில் அவர்களின் புரிதல் எந்த அளவில் இருக்கிறது என்று சோதித்தறிய எளிய வழி தேர்வுகளே. ஒரே நேரத்தில் எத்தனை மாணவர்களின் புரிதல் திறனை வேண்டுமானாலும் மதிப்பீடு செய்ய முடியும் என்பதே நடப்பு தேர்வு முறையின் பெரும் பலம். இதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கரின் திறனை குறைந்த நேரத்தில் சோதித்தறியும் வேறெந்த முறையும் இல்லை. கற்றலின் படிநிலைகளில் இறுதியானது தேர்வுகளே. ஆயினும் கல்வியின் மையம் கற்றலே. ஒரு போதும் கல்வி முறையின் மையமாக தேர்வுகள் இருக்கக் கூடாது. ஆனால் நடைமுறையோ முரண்களின் இன்னுமொரு உச்சம்.
எந்த கல்வி முறையாயினும் அதில் தேர்வுகள் தரும் அழுத்தங்கள் ஓப்பீடற்றவை. கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் அறிவு புகட்டுதல் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு மதிப்பெண்கள் பெறுவதே முன்னிலை படுத்தப்படுகிறது. இன்றைய சூழலில் கற்றல் செயல்பாட்டின் மையமானது சந்தேகமே இல்லாமல் தேர்வுகள் தான். ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுக் கொடுப்பது, மாணவர்கள் பாடங்களைப் படிப்பது -அவர்கள் அதிக மதிபெண்களை அறுவடை செய்வதன் பொருட்டு தனியாக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது உள்பட- அனைத்துமே தேர்வையும் அதில் பெறவேண்டிய மதிப்பெண்களையும் மட்டுமே சார்ந்திருக்கின்றது. கற்றதன் ஆழமறிய தேர்வுகள் நடத்தப்படுவது போய் கற்றல் நிகழ்வே தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காகத் தான் என்ற நிலைதான் நிதர்சனம். தேர்வுகளில் வெல்ல அனைத்தையும் கற்கத் தேவையில்லை. மாறாக அந்த பூதத்தின் வீட்டிலிருந்து வெளியேறித் தப்பிக்க சில வழிமுறைகளையும் சூத்திரங்களையும் தெரிந்து கொள்வதே போதுமானதாக இருக்கிறது. இதனை சிறப்பாக அறிந்து வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர் என்றும், அப்படி ரகசியங்களை தம் மாணவர்களுக்குப் சிறப்பாக பயிற்றுவிக்கும் பள்ளியே தலைசிறந்த பள்ளியென்றும் கருதப்படும் சமூகப் பார்வையும் புரிதலும் மேலோங்கியிருக்கும் காலகட்டமிது. இதனாலேயே ஒரு மாணவர் பெரும் மதிப்பெண்களுக்கும் அவரது அறிவுத்திறனுகுமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது அம்மாணவனுக்கும் மட்டுமல்ல அது இந்த சமூகத்தின் எதிர்காலத்திற்கும் உவப்பானதல்லவே!
தேர்வுகளில் வெற்றி பெற்றவரின் நிலை என்பது இப்படியாக இருந்தால், தேர்வுகளில் வெற்றி பெறாதவரின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் ஏதோ வாழவே தகுதியில்லாதவர்கள் போல குடும்பத்தினர், சுற்றத்தாரின் ஏச்சு பேச்சுகளால் சுயம் வெறுத்து சுருக்கி சமூகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ளும் அவலம் இன்னும் மோசமானது. கற்றலில் தரத்தை உயர்த்த மேற்கொள்ளப்படும் செயல்பாடே தேர்வுகள். ஆனால் இன்றோ அந்தத் தேர்வுகளே கற்றல் செயல்பாடுகள் முழுமையடையாமல் போவதற்கான அதிமுக்கிய காரணியாக விளங்குவது வினோதமானதே.
 
I hear
 
கருத்தியல் மற்றும் செயல்முறைக் கற்றல்களுக்கிடையேயான பொருந்தாமை
 

 “கேட்பவற்றை மறந்து போகிறேன்
பார்ப்பவற்றை நினைவிற் கொள்கிறேன்
செய்பவற்றை புரிந்து கொள்கிறேன்”

சீனத் சிந்தனையாளர் கன்ப்யூசியஸின் மிகப் பிரபலமான் பொன்மொழி இது. கற்றலில் பிரதானமாக இரு நடைமுறைகள் உள்ளன. அவை கருத்தியல் வழி கற்றல் (Theoretical Learning)  செயல்வழிக் கற்றல் (Practical Learning) என்பன. செயல்வழிக் கற்றலின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேச முற்படும் போதெல்லாம் கண்டிப்பாக இந்த மேற்கோள் பயன்படுத்தப்படும். சொல்லப் போனால் மேற்குலக நடைமுறைகள் முற்றிலும் நம்முடையவைகளுடன் மாறுபடுவது  இவ்விடயத்தில் தான். நமது கல்வி திட்டத்தின் வடிவமைப்பே அதிக தகவல்களை மாணவரிடத்தில் திணிப்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். குறிப்பாக மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் கற்கவோ கற்பிக்கவோ ஏற்ற கால அவகாசத்தை காட்டிலும் அதிகமாகவே இருக்கின்றன. அதாவது வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பாடத்திட்டத்தின் அனைத்து பாட பகுதிகளையும் ஒரு ஆசிரியர் திருப்திகரமாக கற்பிக்கவோ, ஒரு மாணவர் சிறப்பான முறையில் அதனை கற்றுக் கொள்வதோ நடைமுறை சாத்தியமற்றது. இதனை கல்விப் புலத்திலிருக்கும் இருக்கும் யாவருக்கும் தெரிந்த ரகசியம். ஒரு ஆசிரியனாக இது என் அன்றாடங்களில் ஒன்றே. என்னை இதுகாறும் ஆச்சரியப்படுத்துவதும் இதுவே. நிச்சயமாக நாம் போதாமைகள் நிறைந்த ஒரு கால கெடுவிற்குள் அறிவை சீரிய முறையில் புகட்ட முடியாது. இருப்பினும் பாடப்பகுதிகளை தேர்வின் பொருட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் நடத்துவது ஒரு ஆசிரியனின் அடிப்படை கடமைகளுள் தலையாயது. என்ன ஒரு நகைமுரண்? அப்படி அவசரகதியில் மாணவன் உள்வாங்கிக் கொள்ள முடியாத வேகத்தில் பாடங்களை போதிப்பதால் என்ன பிரயோசனம்? அதனால் நமது கல்வி முறை எதனைச் சாதித்துவிடப் போகிறது? இக்கேள்விகளோடு தான் ஒவ்வொரு நாளும் ஆசிரியப் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.
மேற்குலகின் மாணாக்கர்களின் கற்றல் முறைமைகள் இதற்கு நேர் மாறாக இருக்கின்றது. ( இங்கு நான் குறிப்பிடுவது உயர்கல்வியைத் தான். அவர்களின் பள்ளிக் கல்வியைக் குறித்த எனது புரிதலை மிக சமீபமாக முற்றிலும் மறுஆக்கம் செய்ய வேண்டியதிருந்தது. அதற்கான காரணத்தை தனிக் கட்டுரையாகவே எழுதலாம்.) அம்மாணவர்கள் கற்கும் பாடங்களை சரிவிகிதத்தில் கருத்தியல் வாயிலாகவும், செயல்முறை கற்றல் வாயிலாகவும் கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் கற்கும் பாடங்களின் அளவு ஒப்பீட்டளவில் நம்முடையதை விடவும் குறைவே எனும் போதிலும் அவர்களின் கற்றலில் தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது. நமது கல்வி முறையில் பள்ளிப் பருவத்தில் செயல் வழிக் கற்றலுக்கான சாதகமான சூழ்நிலை மிகக் குறைவே.
 
(இக்குறுந்தொடரின் நிறைவுப் பகுதி அடுத்த வாரம்.)