[இந்த கட்டுரைத் தொடரின்இறுதி மற்றும் நிறைவுப் பகுதி]
 
துறைகளைத் தேர்வதிலுள்ள மந்தைப் புத்தி
 
இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியோடு  நேரடியாக தொடர்பு படுத்தப்பட வேண்டியது இது. கற்கும் கல்வி நிறைய பொருளீட்டுவதற்கான மூலதனம் எனும் மனோபாவம் ஆழப் படிந்துவிட்ட ஒரு சமூகத்தில் இளையோர் எந்த துறையை தங்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பது எனும் விடயத்தில் ஒரு மந்தைத்தனம் இருப்பதை நாம் கண்கூடாக காலந்தோறும் கண்டு வருகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை நட்சத்திர அந்தஸ்து பெறுவது இயல்பு. உதாரணமாக என்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளிலும் பொறியில் பாடப்பிரிவுகளில் மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகள் பலரால் விரும்பிப் படிக்கப்படும் துறைகளாக விளங்கின. பின்னர் வந்த தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சி அனைவரையும் அதன் பக்கம் இழுத்தது. ஆனால் ஒரு துறை உச்சத்தில் இருக்கிறது என்பதனை அதில் வாய்ப்பு ஏனைய துறைகளை விட அதிகம் என்பதாக மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் அதே வேளையில் பிற துறைகளிலும், புலங்களிலும் இருக்கும் வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமற் போவதில்லை என்பதனையும் மனதிற் கொள்ள வேண்டும். நமது இந்திய குடும்ப அமைப்புகளில் குழந்தைகளுக்கு சுயமாக முடிவுகள் எடுக்கும் சுதந்திரங்கள் மிகக் குறைவே. இளையோரின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் உரிமை பெற்றோரிடமே இருக்கிறது. அவர்களிடம் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உடனடி உத்திரவாதமளிக்கும் படிப்பு பரவலாக எல்லொராலும் விரும்பப்படும் படிப்பே எனும் எண்ணம் அசைக்க முடியாத வண்ணம் ஆழப் பதிந்திருக்கிறது. படிக்கவிருக்கும் அந்த குழந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு அங்கே மதிப்பில்லை. விரும்பித் தேர்வது வரம். விருப்பமின்றி நிர்பந்திக்கப்படுவதை விட நரகம் வேறில்லை.
கல்வி வியாபாரிகள் பெற்றோரின் மந்தைத்தனத்தை இயன்ற வரை சுரண்டுகின்றனர். ஒரே துறையில் நிறைய பேர் முட்டி மோதுவதால் போட்டி கடுமையாகிறது. வெற்றிக் கோட்டை அடைவதற்கான பாதையில் தடைக் கற்கள் ஏராளமாகின்றன. மன அழுத்தமும் விரக்தியுமே பலருக்கு மிஞ்சுகிறது. விருப்பமில்லாத துறைக்குள் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு மாணவர் சக மானவரைப் போல திறமையாக கற்கவும் முடியாமல், தனது மனதிற் புதைந்து கிடக்கும் சுயமாக வளர்த்தெடுத்த கனவினை அடைய முடியாமலும் ஒருவித சுய வதைக்கு ஆளாகிறார்.
வெகு மக்களின் மந்தைப் புத்திக்கு ஒரு எளிய உதாரணம். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக பொறியியல் பயிலும் மோகம் மெள்ள வலர்ந்து உச்சத்தினை அடைந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளின் இம்மோகம் ஏறத்தாழ உச்சத்தினின்று கீழிறங்கத் துவங்கி விட்டது. பொறியியற் படிப்புகளுக்கான மதிப்பு தற்போது சரிந்துள்ளது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் இத்தகைய சரிவை அறிவியல் மற்றும் கலைப் பிரிவு பாடங்கள் சந்தித்து வந்தன. இப்போதோ மீண்டும் அவை மாணவர், பெற்றோர் மத்தியில் கவனம் பெற்ற படிப்புகளாக மாறத் துவங்கியுள்ளன என்பதை நான் கண்கூடாக காண முடிகிறது.
 
Engg to Arts & Science
 
இது போக தமிழகத்தைப் பொறுத்தவரை 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு இல்லாமலேயே போன பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வுகள், தற்போது நீட் தேர்வின் வடிவில் தற்போதைக்கு மருத்துவத் துறையில் மீண்டும் கால் பதித்துள்ளது. இது மக்களின் பொதுப் புத்தியில் இன்னொரு குருட்டுத்தனமான மடை மாற்றத்தினை கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். பொதுப் புரிதல் கொஞ்சமேனும் ஆழப்பாடத வரை, கல்வியின் நோக்கம் குறித்த முழுமையான தெளிவு பிறக்காத வரை இப்போக்கில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.
இங்கே நாம் கவனத்தில் எடுத்துக் கொண்ட முரண்கள் மிக சிலவே. சொல்லாமல் விடுபட்ட என்னும் எத்தனையோ நிலவியல் சார்ந்த, மொழி சார்ந்த, வாழ்வியல் சார்ந்த முரண்கள் இருக்கவே செய்கின்றன. கல்வி மேம்பாடு குறித்து நாம் மேற்கொள்ளும் உரையாடல்களில் வெறும் கல்வித் துறைக்கு வருடந்தோறும் ஒதுக்கப்படும் குறைவான நிதி, ஆசிரியர்-மாணவர் இடையேயான சிக்கல்கள், கல்வியின் முழுமையான மேம்பாட்டிற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்றவையே மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாகின்றன. ஆனால் மிக ஆதாரமாக நமது கல்விமுறையில் இருக்கும் முரண்கள் குறித்து பேசாமல் இத்தகைய உரையாடல்கள் ஒரு போதும் முழுமை பெறாது.
 
(குறுந்தொடராக வெளிவந்த இக்கருத்துகளை, ஒரே நீள் கட்டுரையாக வெளியிட்ட ‘உயிர் எழுத்து’ இலக்கிய மாத இதழுக்கு நன்றியும், பேரன்பும்.)