-வருணன்
 
தொடர்ச்சியாக மொழி குறித்து இந்த ஞாயிறு பத்தியில் பல்வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டே வருகிறோம். மொழியின் அடிப்படைப் பயன்பாடு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதே என்பதை சொல்லத் தேவையில்லை. முன்னொரு பதிவில் வெறும் சொற்களின் குவியல் மட்டுமே மொழியல்ல என்றும், ஒருவர் தெரிந்து வைத்திருக்கிற சொற்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டே அவரது மொழி ஆளுமையை நாம் மதிப்பீடு செய்ய இயலாது என்றும் பார்த்தோம்.
சக மனிதர்களிடம் நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வது பெரும்பாலும் உரையாடல்கள் வழியாகவே நடக்கிறது, நம் அன்றாட வாழ்க்கையில். நமது எண்ணத்தை வெளிப்படுத்தவும், நமது கருத்தை பரிமாறிக் கொள்ளவும் மிகச் சிறந்த ஊடகமாக இருப்பது என்றென்றைக்கும் மொழியே. ஆனால் நமது கருத்தை இன்னொரு மனிதரிடம் நாம் பரிமாறிக் கொள்ளும் அதே வேளையில் நமது உணர்வுகளையும் சேர்த்தே தான் பரிமாறிக் கொள்கிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பேச்சில் சொற்கள் வழியே எண்ணங்களும், கருத்துக்களும் பகிரப்படும் அதே வேளையில், அதோடு இணைந்த உணர்ச்சிகள் அந்த சொற்கள் பேசப்படும்  தொனி (tone) வாயிலாகவே வெளிப்படுத்தப்படுகிறது என்பது மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.
 
principles of communication
 
இரு மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உரையாடலானது எந்த கட்டத்தில் இருந்து வாக்குவாதமாக மாறுகிறது என்பது நுட்பமாக கவனிக்கப்பட வேண்டியது. முன்வைக்கிற கருத்தில் ஏற்படுகிற முரண்பாடு தான் அடிப்படைக் காரணம் எனும் போதும் அக்கருத்து எத்தகையை உணர்ச்சியோடு வெளிப்படுத்தப்படுகிறது என்பதும் அதே அளவிற்கு முக்கியமானதாக இருகிறது. நான் சொல்ல முயற்சிப்பத்தை ஒரு நகைச்சுவையான எடுத்துக்காட்டின் மூலம் சொல்வது எளிது என்று தோன்றுகிறது.
பொதுவாக வாட்ஸப் செயலியின் வழியே நாம் எல்லா செய்திகளோடு சேர்த்தே பல நகைச்சுவைத் துணுக்களையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு துணுக்கை அனுப்பியிருந்தார். “உடம்பு எப்படி இருக்கிறது?” என்று அம்மா கேட்பதற்கும், அதே கேள்வியை மனைவி கேட்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒற்றை வரிதான் இந்தத் துணுக்கு. பொதுகாவே நம்மிடையே மனைவிகளுக்கு கணவர்கள் பயப்படுவதாக நிலவுகிற பொதுவான வெளிப்பாட்டை (இது எல்லா குடும்பங்களிலும் பொதுவானது அல்ல எனும் போதிலும்) அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைகளில் ஒன்று தான் மேலே பார்த்தது. இது ஆணினுடைய தாயை உயர்த்திச் சொல்லிக் கொள்ளவும் பயன்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கலாம்.
சரி விசயத்திற்கு வருவோம். மேற்சொன்ன துணுக்கை வாசிக்கிற நபர் ஒருவர் வார்த்தைகளோடு அதன் தொனியையும் சேர்த்தே தனது கற்பனைத் திறன் மூலமாக உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே இதிலுள்ள கிண்டலைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது அந்த துணுக்கில் மனைவி மற்றும் அம்மா கேட்பதாக சொல்லப்பட்டுள்ள கேள்வி என்னவோ ஒன்றுதான். வார்த்தைகள் எதுவும் மாறவில்லை என்ற போதிலும் இத்துணுக்கை வாசிக்கிற நபர் ’அம்மா கேட்பதற்கும்’ என்ற இடத்தில், வாசிக்கும் போதே மனதிற்குள் கனிவாக அக்கேள்வியை கேட்பது போல பாவித்து வாசித்துப் பார்ப்பார். மேலும் ’மனைவி கேட்பதற்கும்’ எனுமிடத்தை வாசிக்கும் போதோ கொஞ்சம் அதட்டல் தொனியில் மனதிற்குள் வாசிப்பார் இல்லையா? அப்படி வாசிக்காவிட்டால் இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்று தானே தோன்றிடும்!
அது தான் நான் சொல்ல நினைப்பதும். ஒரே வாக்கியத்தை நாம் பல்வேறு உணர்வுகள் தொனிக்கும் வகையில் மாற்றி மாற்றி பேசிட முடியும் தானே!
 
words,tone & body language
 
பொதுவாக பேச்சு மொழியில் சரியான வார்த்தைகளை தேர்ந்து பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த வார்த்தைகளை எந்த தொனியில் பேசிட வேண்டும் என்பதிலும் கவனம் தேவை. தொனி என்பதை நாம் பேசுகிற போது நமது குரலில் சேர்த்துக் கொள்ளும் ஏற்ற இறக்கங்கள் என்று சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். இது தொடர்பான அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் மனிதர்களின் பேச்சை பிறர் சரியாக புரிந்து கொள்வதில் வார்த்தைகளின் பங்களிப்பு வெறும் 7% தான் என்ற தகவல் நம்மை நிச்சயமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மேலும் தொனிக்கு இருக்கும் முக்கியத்துவத்தினை விட பேசும் மனிதரின் உடல் மொழியே வெற்றிகரமான தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதும் முக்கியமாக இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
பேச வேண்டிய வார்த்தைகளை சிரத்தையுடன் தேர்ந்தெடுக்கும் நம்மில் பலர் அந்த வார்த்தைகளை நாம் எந்த தொனியில் பேசப் போகிறோம் என்பதில் அதிகம் கவனம் எடுக்கத் தவறி விடுகிறோம் என்பதே உண்மை.