எழுத்து ஒடுக்கப்படுபவர்களின் குரலாகவும், அடக்குகிறவர்களுக்கு எதிராகவும் ஒலிக்க வேண்டும். கலையில் பொது அம்சமும் அதுவே ‘Art should voice the oppressed and disturb those who oppress’ என்பார்கள். பாரதியின் நூற்றாண்டு விழா நினைவுத் தொகுப்பாக வெளிவந்த சிறந்த எழுத்தாளர்களின் எழுதிய பாரதி சிறுகதைகள் தொகுப்பில் வெளியான சுஜாதாவின் இச்சிறுகதை அது வெளியான காலகட்டத்தில் (1982) மிக காத்திரமான அரசியலை முன்வைத்திக்கிறது என்றால் அது மிகையற்ற உண்மையே. மிக நேர்மையாகவும், மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் இது போல மிக அரிதாகவே புனைவுகள் நிசத்தின் மிக அருகில் செல்கின்றன.
 
கதைச் சுருக்கம்:
பாரதி குறித்த ஒரு சர்வதேச கருத்தரங்கு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் நல்லுசாமியின் பெயர் புதியதாக துவங்கப்படவுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அவரே துணைவேந்தராக அறிவிக்கப்பட இருப்பதாக செய்தி உலவுகிறது. கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர் என்ற முறையில் அவரும் இறுதி உரை நிகழ்த்த இருப்பதாக நிகழ்ச்சி நிரல் சொல்கிறது. அவரது பேச்சைக் கேட்கவே அமைச்சர் அன்று பிற்பகலில் நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்றும் பேச்சு வந்திருப்போரிடையே சுற்றுகிறது.
இதற்கிடையே மதியம் பேசவிருக்கிற ஒரு கருத்தாளர் யாழ்பாணத்தைச் சேர்ந்த செல்வரத்தினம் எனும் இளைஞர். அவர் தனிப்பட்ட முறையில் நல்லுசாமியை அவரது விடுதி அறையில் சந்திக்க வருகிறார். தமிழின் பால் கொண்ட காதலாலும், மரியாதையினாலும் ஒரு முறை வேறொரு நிகழ்விற்கு இலங்கை சென்றிருந்த போது நல்லுசாமியை தனது வீட்டிலேயே அவர் இரு நாட்கள் தங்க வைத்திருந்ததும் அவரது நினைவிற்கு வருகிறது.
தனது குடும்பத்தையே இழந்த சோகத்தைற்கு இணையாக செல்வரத்தினத்தின் மனதை யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் (சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையின் பட்டவர்த்தனமான வெளிப்பாடாக அமைந்தது சூன் 1, 1981 இரவில் நடந்த கொடூரம் அது. மிக அரிதான பல நூல்களின் கருவூலமாக விளங்கிய யாழ் தமிழ் நூலகத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்கள் அந்த ஒற்றை இரவில் ’தீ’க்கு தின்னக் கொடுக்கப்பட்டது. இலங்கை மண்ணில் உள்நாட்டு யுத்தத்தின் மிகத் தீவிரவான வடிவம் பெற இச்சம்பவம் ஒரு மிகப் பெரிய காரணமாக இருந்தது) ஆழமாக சஞ்சலப்படுத்தியிருக்க, அவர் தனது உரையை சர்வதேச அரங்கிற்கு நடந்த நூல்களின் அழித்தொழிப்பை வெளிப்படுத்திம் ஒரு வாய்ப்பாக கருதுவதாக சொல்கிறார். ஒரு லட்சம் நூல்கள் எரிக்கப்பட்டதன் இழப்பை, அதன் வலியை உணர்ந்த பேடையிலேயே அந்த விழா மலரை கொளுத்தப் போவதாகவும் சொல்கிறார்.
தனது பணிவாழ்வில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்வரத்தினத்தின் உரை நிச்சயம் முட்டுக்கட்டையாக இருக்குமென்பதை – அதுவும் வரவிருக்கும் அமைச்சரின் முன்னிலையில் – உணர்ந்தவராக தனது செல்வாக்கைப் பிரயோகித்து திரைமறைவு அதிகார அரசியலால அவரை பேசவே விடாமல் செய்து விடுகிறார். நிகழ்வின் இறுதியில் எதிர்பார்த்தது போலவே அமைச்சர் நல்லுசாமியை பல்கலையின் துணைவேந்தராக அறிவிக்கிறார்.
 
வாசகனின் குறிப்புகள்:
தீவிர இலக்கியத்திற்கும், வணிக எழுத்திற்குமிடையேயான இடைவெளி பெரிது. நோக்கங்களும் வேறு வேறு. இவை இரண்டிற்கும் இடையில் ஒரு ’இடை எழுத்தை’ தனது பாணியாக கைக்கொண்டு அதனை மிக நேர்த்தியாக கையாண்ட முதன்மையான படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் சுஜாதா. ஒரு தலைமுறையையே வாசிப்பிற்குள் இழுத்து வந்தது இவரது ஆகச் சிறந்த இலக்கியப் பங்களிப்பு என்றால் அது மிகையல்ல. பலருக்கும் இலக்கிய வாசிப்பிற்கு நுழைவாயிலாக இன்றும் இருப்பது சுஜாதாவின் படைப்புகள் தான்.
 
Writer Sujatha
 
இந்தக் கதையில் கூட வணிக எழுத்தின் அடிநாதமான சுவாரசியத்தையும், நாடகீயத்தையும் முழுக்க தனது சொல்முறையாகக் கொண்ட ஒரு நடையில், தீவிர எழுத்தின் வழியே செய்ய வேண்டிய பதிவுகளை இப்புனைவின்வழி சாதித்திருக்கிறார் ஆசிரியர். கதை இரண்டு தளங்களில் இயங்குகிறது.
இலக்கியத்தின் மீது உண்மையான பற்றுடைய தீவிர இலக்கியவாதிகள் ஒரு பக்கம் மௌனமாக தமது பங்களிப்பை செய்துகொண்டிருக்கிற அதே வேளையில், இன்னொரு பக்கம் இலக்கியத்தை வளர்க்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கூட்டங்களையும், கருத்தரங்கங்களையும் சுய ஆதாயத்தை முன்னிறுத்தி மட்டுமே இயல்பு கொண்ட போலி இலக்கியவாதிகள் மலிந்து போய்க் கிடக்கின்றனர். அவர்களுள் பலர் இலக்கியத்த்தின் இயங்குமுறைகளை மிகச் சிறப்பாக புரிந்து கொண்டவர்களாவும், படைப்பின் சூட்சுமங்களைக் கைக்கொண்டவர்களாகவும் கூட இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையை படிக்கத் தரும் இலக்கியத்தின் அரவணைப்பில் இருந்து கொண்டே அதனை உளப்பூர்வமாய் தம்முள் செயலாற்ற விடாமல் வாழும் இம்மனிதர்களை இலக்கியவாதிகள் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் தேர்ந்த இலக்கிய படைப்புகளை உற்பத்தி செய்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். இலக்கிய உலகின் இந்த பாசாங்கை தனது அடிநாதமாகக் கொண்டிருக்கிரது ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’.
ஏறத்தாழ ஒரு துறையின் இயங்குமுறையின் மீதான விமர்சனத்தை, மறைமுகமாக, ஆனாலும் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறது கதை. தனது இலக்கிய மேதைமையை வாழ்வின் முன்னேற்றத்திற்கான வெறும் படிக்கட்டாக பாவிப்பதில் டாக்டர்  நல்லுசாமியின் பாத்திரம் வாசகன் முன்னால் நிற்கிறது. இந்த மையச் சரடுடன், யாழ் நூலக எரிப்பின் துயர வரலாற்றை செல்வரத்தினம் எனும் ஈழக் கதாபாத்திரத்தின் புனைவிற்குள் ஒளித்து வைத்து, அதன் மீதான ஒரு படைப்பாளியின் தார்மீக கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.
கதையின் முடிவு ஊகிக்க முடிவதாய் இருக்கும் போதிலும், மிக நேரடியாக அந்த காலகட்டத்தில், ஈழ எதிர்ப்பில் தாங்களும் பங்களித்திருக்கிறோமென சொல்லும் தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் பத்திரிக்கை ஊடகங்களில் செயல்பாடுகளிலும் -பெயர்கள் கூட மாற்றப்படாமல்- சில வரிகளிலேனும் குறிப்பிடப்பட்டு, விமர்சிக்கப்படுவது சற்றே ஆறுதல் அளிக்கின்ற விசயமாகவே இருக்கின்றது.
 
இச்சிறுகதையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்
http://azhiyasudargal.blogspot.in/2012/06/blog-post.html